Saturday, December 22, 2007

நீ வரமா! சாபமா??

மழை பொழிந்து வாசல் தெளித்தது மேகம்
மென்சோகக் கவிதையாய்...
நீ
வாசல் தெளிக்கும் வாய்ப்பை - இன்று
தவறவிட்டது உன் தெரு!

அடுக்கி வைக்கப்பட்ட சீட்டுக்கட்டாய்
சரிந்து வீழ்கிறேன்...
உன் சிரிப்பினில்!

நாத்து நடும் வேளையிலே
காத்திருந்து சிரிச்சவளே...
நாத்து முத்தி நின்னாச்சு
அறுவடைக்குத் தேதி சொல்லு!

சடசடவென
சோம்பல் முறிக்கும் தூரல்...
நினைவுபடுத்திச் சென்றது உன்னை!

அனுதினமும் என்னை உறங்க வைப்பது...
உன் குரலா??
இல்லை..
உன் குரல் கேட்ட நிறைவா???

முன்னிரவுப் பொழுதில் பெய்த மழையில்
நனைந்தது நான் மட்டுமில்லை...
என் மனதும்தான்!

நீண்டநெடு நாட்களுக்குப்பின்
கவிதைகள் புனைந்தேன்...
காரணம் நீ!

என்னில் விழுந்ததும் நீதான்..
என்னுள் இருந்ததும் நீதான்..
இரவு நேரக்கனவின் வழியே..
இதயம் திருடிச்சென்றவள் நீதான்!
பகல்பொழுதில் - பாதத்தில்...
பக்கவாத்தியக் குறுகுறுப்பு நீதான்!
தொலைபேசா நாட்களிலே..
தொல்லையாக இருப்பவள் நீதான்!
கண்ணீர் சிந்தும் பொழுதுகளில்..
கைகள் மீது பற்றுதல் நீதான்!
என்னை உருக்கும் இயல்பினிலே..
எப்பொழுதும் எனக்குள் நீதான்!
கவிதையே சொல் - நீ
வரமா? சாபமா??
இல்லை...
வரம்வாங்கச் செய்யும் தவமா???

Tuesday, December 18, 2007

அழகான ராட்சசிக்கு...

நீ இல்லாத நிலமும் வானும்
வான் இல்லாத இரவும் நிலவும்
நீ பேசாத இரவும் பகலும்
நான் வாழாத தருணங்களாகும்
புயல் காற்று வீசுகின்ற போதும்
என் சுவாசம் உன்னைத்தான் தேடும்
மழை தூறும் பகல்நேர வானம்
உன் பார்வை நினைவூட்டிச் செல்லும்
சிறு குழந்தை பார்க்கின்ற போதும்
உன் குறும்பு நெஞ்சுக்குள் மலரும்
பனிக்காற்று பறைசாற்றி செல்லும் - ஒரு
பறவை போல் மனம் துள்ளும்
நான் இயல்பாக இருக்க நினைத்தால்
உன் இயல்பு எனை மாற்றிச் செல்லும்
ஏன் தோழி??

தென்றல் என்னைத்
தொட்டுச் செல்கையில்
தேடிப் பார்க்கிறேன்
ஒவ்வொரு முறையும்...
நீ
என்ன சொல்லியனுப்பினாய் என்று!!!

நீயும் மழையும்
தூண்டிவிடுகிறீர்கள் என்னை...
கவிதை எழுத!!!

மழைக்கால மரக்கிளையில்
பறவைகளின் கீச் கீச்...
உணவு தேட இயலாததாலா...
சிறகுகளே சுமையானதாலா...

ஒரு வாரப் பிரிவு
உணர்த்தியது எனக்கு...
எனக்குள் நீ
எத்தனை ஆழமாய்
வேரூன்றி இருக்கிறாய் என்று!!

அனிச்சை செயலாய்
ஆகிப் போனது...
உனக்குத் தொலைபேசுவதும்
குறுஞ்செய்தி அனுப்புவதும்!!!

பிரிவின் வலியை விட
வலித்தது அதிகமாய்...
தெரிந்தே பிரிந்திருக்கிறோம் என்பதால்!!!

காற்றின் திசையில்
திரும்பும் மலர்கள்...
நீ வந்தவுடன்
சூரியகாந்தியானது ஏன்??

வெறுமையை சுமந்து திரிகிறேன்...
பொறுமையை சோதிக்காதே பெண்ணே..

ஏதோ ஒன்றைப் பறிகொடுத்தது போல்
இருப்பதாக சொன்னார்கள்..
அது
நான் தான் என்பது தெரியாமல்!!

கடந்து போன மேகம்
எனக்கு மட்டும்
மழை தூறிச் சென்றது...
என்ன சொல்லியனுப்பினாய்?!?

ஒரு வாரத்தின் முடிவில்
நீ
என்ன பெறப்போகிறாயோ
நானறியேன்...
ஆனால்
நான் இழப்பது அதிகம்!!!

என் வாழ்வில் நீ
வார்த்தையல்ல... வாக்கியம்!!!
முற்றுப்புள்ளி இல்லாது
முற்றுப் பெற்றவள் நீமட்டும்தான்!!!

உன்னுடன் பேசாதிருந்த நாட்களில்
நான் உயிர்வாழ்ந்ததாய்
நினைவிலில்லை...

உன் மடிமீது தலைவைத்து
நட்சத்திரங்கள் எண்ணத்
தேவையில்லை எனக்கு...
உன் தோளில் முகம் புதைக்கும்
தோழமை போதும் எனக்கு!!!

Monday, December 03, 2007

ஆதலினால் காதல் செய்வீர்

மழையில் நனைய
எப்போதும் மறுத்துவிடுகிறேன்...
எனக்குள் இருக்கும் உன்னைக் கரைக்க
இறைவன் செய்யும் சதியென்று!

வீணையைப் போன்றது
என் காதல்..
நீ
துடைத்து வைக்கப் போகிறாயா...
இசை மீட்டப் போகிறாயா?!?

காதல் என்னை எப்போதும்
கடைசி வரிசையில்
நிறுத்திவைத்தது...
நீதான் முன்னிறுத்தினாய்!!!

ஊர் முழுக்க ஒலிபரப்புகிறேன்..
உன்மீதான என் காதலை!
உன்னிடம் மட்டும் ஏனோ
உறக்கம் கலைக்க மறுக்கிறேன்...

எனக்கான இசையை
உன்னிடத்திலும்...
உனக்கான பாடலை
என்னிடத்திலும்...
ஏன் வைத்தான் இறைவன்?!?

வார்த்தைகளின் நினைவிடத்தில்
நின்றுகொண்டிருக்கிறேன்...
உன்னிடம் சொல்ல மறந்த
ஒரு கோடி சொற்கள்...
இங்குதான் புதைக்கப் பட்டிருக்கின்றன..!

ஆதலினால் காதல் செய்வீர்!!!

உன்னைக் காதலிக்க ஆரம்பித்தேன்...
கையெழுத்து அழகானது!
நீயும் என்னைக் காதலித்தாய்...
என் தலையெழுத்து தவறானது!!!

இரவுமுழுதும் உறக்கம் வரவில்லை...
நீ எனக்குள்
விழித்துக் கொண்டிருந்தாய்!

உன்னுடன்
பேசுவதற்கான வார்த்தைகளைக்
கோர்த்து வைத்திருந்தேன்..
காற்றாய் வந்து
கலைத்துப் போனது ஏனடி?!?

உன்
நினைவுகளின் ஜதியில்
நாட்டியமானேன்...
பிரிவின் வலியில்
பேச்சற்றுப் போனேன்!

உன் ஒரு வார்த்தை ஜனனம்..
ஒரு வார்த்தை மரணம்!
இந்த இரண்டுக்கும் இடையில்...
நிகழ்கிறது என் பயணம்!

இறந்துவிடவும் சம்மதம்..
பிரிந்து விடாதே...
இறப்பிலும் கொடியது
பிரிவின் வலி!